காதலாகி – கடுப்பாகி

poet1.jpg

ஹலோ கவிஞரே

இங்க வாங்க

இது நீங்க எழுதுன புத்தகம்தானே?

 

 ஆமாம் என்னோடதுதான்

காதல் கவிதைகள் 

   

“சரி உங்க வாயாலே

கொஞ்சம் வாசிங்க கேக்கலாம்..”

   

 நீ

நானகி

உன்னிடம்

முத்தம் பெற்று பார்

இந்த உலகம்

எவ்வளவு அழகானது

வாழ்க்கை

எவ்வளவு சுவாரஸ்யமானது

உன் முத்தம்

எவ்வளவு வலிமையானது

என்று தெரியும்.

நானாக சொன்னால் பொய் என்பாய்.

இது

உன் காதல் பிதற்றல் என்பாய்

நீ

நானாகி

உன்னிடம்

முத்தம் பெற்றுபார்… 

 

நிறுத்து…நிறுத்து

அட நிறுத்துங்க…

கொஞ்சமாவது

நியாயமா இருக்கா

நீங்க பண்றது?

உங்க காதலிக்கு

எழுதறதா இருந்தா

15 பைசா

போஸ்ட் கார்டு

வாங்கி எழுதியனுப்ப வேண்டியதுதானே.

உங்க அந்தரங்கத்தை எழுதி

புக்கு போட்டு விக்கிறது

அசிங்கமா இல்லை?

  

 உங்களுக்கு

அழகியல் உணர்ச்சியே இல்லை 

  

எது

உங்க காதலிய பத்தி

ஊரே தெரிஞ்சுக்கிறதுதான்

அழகியல் உணர்ச்சியா?

காதல்

காமம்

இதெல்லாம்

எவ்வளவு பிரத்தியேகமானது

அந்தரங்கமானது

தெரியாதா உங்களுக்கு.

30 ரூபா கொடுத்து

புத்தகம் வாங்கி

நாலு விஷயம்

தெரிஞ்சிக்கலாம்னு

பார்த்தா…

அடுத்தவன் டைரிய

எடுத்து படிக்கிறமாதிரி

ஒரே அருவருப்பு…

நாட்டு நடப்பு

தெரியுமா உங்களுக்கு

எங்கப்பாரு

பசி

சுரண்டல்

தீண்டாமை

ஊருக்கு வெளியே சேரி

ஈழத்தில் தமிழர்களோட அவதி… 

   

சார்… சார்…

அத பத்திக்கூட

எழுதியிருக்கேன் சார்   

  

நிறுத்துயா

நீ

எத பத்தி வேணுனாலும்

எழுதுவே

நீதான் கவிஞனாச்சே… 

  

அட

நீங்க வேற

காதல் பத்தி

சும்மா

எழுதி பாத்தேன்

நல்லா வந்துச்சி

புத்தகமா போட்டேன்

நம்மளுக்கு காதலியெல்லாம்

கிடையாதுங்க.. 

   

அடப்பாவி

இதென்ன

காகிதக் கரமைதுனம் 

  

***

காதலாகி – கடுப்பாகி1998

தெய்வக் குத்தம்

kanchikamakshi.jpg

.

னவில் அவள் வந்தாள்

கனவிலும்

தூங்கிக் கொண்டிருந்த

என்னைத் தட்டியெழுப்பி

எனக்கொரு

பிரச்சினை என்றாள்.

.

நான்கு கைகளோடு நின்ற

அவளைக் கண்டு மிரண்டு,

யார் நீங்கள்? என்றேன்.

என் பெயர் காமாட்சி

ர் காஞ்சிபுரம் என்றாள்.

.

அய்யோ கடவுளா!

கடவுளுக்கே பிரச்சினையா?

ஆச்சரியத்தோடு

கணவனாலா என்றேன்.

கணவனால்

பிரச்சினை இல்லை

பிரச்சினைகளைப்

புரிந்து கொள்ளாமல்

கல்போல் நிற்பவன்

கணவனா என்றாள்.

.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்

நான் அவமானத்தால்

செத்துப் பிழைக்கிறேன்

என் பெண்மை

கேவலப்படுத்தப்படுகிறது

என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்

அய்யோ உங்களையா?

யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!

என்ன செய்தார் அவர்?

அதிர்ச்சியாகக் கேட்டேன்.

.

தினம் தினம்

கருவறையின் கதவுகளை

உட்பக்கமாக சாத்திக்கொண்டு

என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…

என்று சொல்லிக்

கொண்டிருக்கும்போதே

அவமானத்தால் கதறி விட்டாள்.

.

பின் நிதானித்து

குருக்கள் வாயில்

மந்திரம் இருக்கலாம்

மரியாதை இருக்கலாம்

ஆனால்

இதை

பெண்ணின் மனநிலையில்

புரிந்து கொள்

அவமானம் புரியும் என்றாள்.

.

சரிதான், ஆனால்

இதற்கு என்ன செய்ய முடியும்

என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க

உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி.

sami.JPG

கோபத்தோட தொடர்ந்தாள்

எல்லாத் துறைகளிலும்

பெண்களுக்கு உரிமையும்

ஒதுக்கீடும் வேண்டும் என்று

கேட்கிறீர்களே

கோயில் கருவறைக்குள்

குருக்களாக

அர்ச்சகர்களாக

பெண்களை அனுமதித்தால்

உங்கள் புனிதம் என்ன

நாறி விடுமோ? என்று

காறித் துப்புவது போல் கேட்டு

நிலம் நடுங்க

சலங்கை உடைய

தீயைப் போல் போனாள்

காஞ்சி காமாட்சி.

.

***

sami2.JPG

-வே. மதிமாறன்

2002 ல் தலித் முரசு இதழில் வெளியான கவிதை.

சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள், பெண்கள்.

(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.

உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்` என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?

சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது, பக்தியினால் அல்ல.

சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள், மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல. நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.

அதிகாரத்தை விடவும், சுயமரியாதை முக்கியம் அல்லவா?

`தீட்டு` என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர். தந்தை பெரியார் கேட்டார்:

மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு

-வே. மதிமாறன்

விழிப்புணர்வு, மாத இதழ் நவம்பர்-2006.